Tuesday, 8 April 2025

சடையப்பசாமி கோயிலும், காடும் அழிக்கப்பட்ட சரித்திரம்


வெண்டுவ கோத்திர ஸ்ரீ சடையப்பசாமி கோயில் இன்றைய ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகாவின் கொல்லன்கோயில் கிராமத்தில் அமைந்துள்ளது.

தாண்டாம்பாளையம் கருப்பண்ண கவுண்டர்

இன்றிலிருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு 1820 களில் கொடுமுடி தாலூக்கா கொல்லன்கோயில் கிராமத்தில் தாண்டாம்பளையம் என்ற ஊரில் கருப்பண்ண கவுண்டர் என்பவர் வாழ்ந்துவந்தார். இவர் வெள்ளாள கவுண்டரில் வெண்டுவ கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு அக்கிராமத்தில் கோப்புலிநத்தத்தை ஒட்டிய இடத்தில் நூறு  ஏக்கருக்குள் மேல் நஞ்சை புஞ்சை நிலங்கள் இருந்தன. கோப்புலிநத்தத்தில் ஆதிவிநாயகர் கோயிலும் இருந்தது. அதன் வடக்கே பிடாரிகோயிலும் இருந்தது. அதன் அருகே மயானமும், நீர்வழி பாதைபள்ளமும் இருந்தது, அருகில் சுடுகாடும் இருந்தது. அதன் வடக்கே கந்தசாமிபாளையம் எனும் ஊரும் வெள்ளைக்காரர் துணையுடன் உருவாகி இருந்தது. கோப்புலிநத்தம் பெரும் ஊராக இருந்து அழிந்துபோன பிறகு கோயிலும் சுடுகாடும் மிஞ்சி இருந்தன. அதன் தெற்கே தாண்டாம்பாளையம் என்ற ஊர் பாளையக்காரர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.

வெண்டுவ கோத்திர பூசாரி கவுண்டர்  

கருப்பண்ண கவுண்டர் கொல்லன்கோயில் வெண்டுவரில் உள்ள நாலு கரை பங்காளிகளில் ஒரு வகையறாவை சேர்ந்தவர். இவர்களுக்கு கோப்புலிநத்த காட்டில் கருப்பண்ணசாமி ஒன்று குலதெய்வமாக இருந்து வந்தது. மற்ற கரைகட்டு பங்காளிகளுக்கு தனித்ததியே குலதெய்வம் இருந்தது. கருப்பண்ண கவுண்டர் தன் பங்காளிகளுடன் கோப்புலிநத்த கருப்பண்ணசாமி குலதெய்வமாக கும்பிட்டு பூஜை செய்து வாழ்ந்துவந்தார். பூசாரி கவுண்டர் எனவும் அழைக்கப்பட்டார்.

 

கள்ளிபுதருக்குள் பாறையில் பசு பால் சொரிதல்

இப்படி வாழ்ந்து வரும் நாளையில், அவரது கோப்புலிநத்த மேய்ச்சல் காட்டில் அவரது மாடுகள் மேய்ந்துகொண்டிருக்கையில், ஒரு நாள் அக்காட்டில் இடிவிழுந்தது. கோப்புலிநத்த விநாயகருக்கு பின்னேயே விழுந்து ஒரு சுனை உணடானது. பொதுவாக இடி விழுந்து உருவாகும் சுனைகள் வற்றவே வாற்றாத தன்மை இருக்கும். இதனை பாழி என்பர் ஊரில். அந்த சுனையில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் நீர் அருந்த தொடங்கின. பின்னொருநாள் ஒரு மாடு மட்டும் காணாமல் போய் சிறிது நேரம் கழித்து பால் மடியில் இல்லாமல் திரும்பி வருவதை கருப்பண்ண கவுண்டர் கண்டார். தினமும் அவ்வாறு நடந்தது. அதனை தொடர்ந்து செல்ல உத்தேசித்து சென்று பார்க்கையில், மாடானது சுனையில் நீர் அருந்திவிட்டு அருகில் இருந்த கள்ளிபுதருக்குள் சென்று அங்கிருந்த ஒரு பாறையின் மீது பால் சொரிவதைகண்டார்.

வெண்டுவ கோத்திர சடையய்யைன் தன்னாசி உருவானது 

அதன் பின் கருப்பண்ண கவுண்டர் கனவில், கோப்புலிநத்த சுடுகாட்டு கள்ளிபுதருக்குள் அவரது முன்னோர் ஒருவர் தெய்வநிலை அடைந்து தன்னாசியாக ஆகி சுயம்பாக தோன்றி விளங்குவதாக குறிப்பு உணர்த்தப்பட்டது. அதன் பின்  கருப்பண்ண கவுண்டருக்கு தன்னாசி அய்யன் கூறியதன் பெயரில் அந்த மேய்ச்சல் காட்டில் இருந்த சுயம்பான பாறையில் உறைந்திறந்த சுவாமியை சுற்றி 1828 ஆண்டில் சுற்றுசுவர் கட்டிவைத்தார்.

கல்வெட்டு, ஏடு சாசனம் – 1828

கோயில் கருவறையின் ஈசானிய மூலையில், வெளிப்பக்கத்தில் தான் சுவர் கட்டியதை கல்வெட்டாகவும் ஏற்படுத்தி வைத்தார். அதோடு தன்னாசி சடையைய்யனுக்கு குதிரை வாகனம் கோயிலுக்கு நேர்முன்னே செய்து வைத்து கண்திறந்து வைத்தார்.

கருப்பண்ண கவுண்டர் பூமிதானம் செய்தல்

அதோடு அக்கோயில் இருந்த பகுதியில் சடையப்பருக்கு தனது 2௦ ஏக்கர் நிலத்தை சாமிக்கு எழுதிவைத்தார். மேலும், தான் கோயிலுக்கு பூமிதானம் கொடுத்த செய்தியை பட்டயமாக எழுதி உரிமை சாசனம் செய்து வைத்தார். தானே அதுமுதல் முன்னர் இருந்த கருப்பண்ண சாமியோடு சேர்த்து சடையப்பன் தன்னாசிக்கும் பூஜை செய்து வந்தார். பூஜைக்கு பின் சுவாமியானவர் அவரது வீட்டில் உள்ள கவைக்கு சென்றுவிடுவார்.

சடையப்பர் காணி ஏடு - பட்டய நகல்

 

 

 

 

 

 

 

 

 

 

ஓலைச்சுவடி நகல்

 

ஓலைச்சுவடி நகல்

1.       உறறி         குருவாழ்க

ஓம்                குருவாழ்க

         ஸ்ரீ சடையப்பர் காணி ஏடு

நன்றாக       குருவே துணை

2.       உ  சடையப்பந் துணை

சுபமஸ்து. ஸ்வஸ்திஸ்ரீ னிகழும் கலியுக சகாத்தம்

சகக்ஷக்ஷள உயக்ஷ க்குச் சறியான சாலி வாகனம் சகாத்தம்  

க்ஷ எளருய சறுவதாரி சம்வத்சரம் மாறுகழி மீ 16 ய

தெதி சுபயோக சுபதினத்தில் கொங்குமண்டலம்

3.       மேல்கறை யரைய னாட்டுக்குச் சேந்த கொல்லன் கோயில்

கிறாமம் மயிசூறு துறைத்தனம் எடுபட்டுப் போயி கும்பினி

சறுகாறு கட்டி யதிகாரம் செலுத்தி வறுகயில் கொயம்முத்

தூருச் சில்லா பெருந்தொறை தாலூக்காவுக்குச் சேந்த கொல்லன்

கோயில் கிருமத்தவர் யின்றுங் குடியேறியிறுக்கப்பட்ட

சகல குடிகளும் கட்டுக் கல்லையும் காணியாளரும் யிதனால் தெ

றிவிக்கப்பட்ட ஸங்கதி யேதண்டால் யின் கொல்லன் கோயில்

கிறாமம் வழவடைக் கிறாமமாக கந்தசாமிபாளையம் தென்பாற்கெல்லை

4.       வமாயி என்னுடைய பறம்பறை குடும்ப தாவற சங்கம

சொத்தினயால் ஸ்ரீ சடையப்பநத ஆண்டவர் கோயில்

கட்டி வெச்ச வுபயம் யிக்கோயில்

வுதாபைரியந்தழ் கட்டுமான யற்கணங்களும் நஞ்

சையும் புஞ்சையும் மேனோக்கிய மறமும் கீநோக்கிய கிணறும் குட்டம்

வுடும்போடி ஆமை தவழும் நிலமும் ஜலபரஷான நிதி

நிக்ஷக்ஷேபம் யின்னும் சகல பூசை புனங்காரம் கங்கா குலத்து

தித்த வுத்தம வெண்டுவ கோத்திரம் புத்தாரன புருஷரான

ஸ்ரீ கறுப்பன கவுண்டர் வர ஸ்ரேஷ்டர் வெள்ளான்  வெண்டுவ கோத்திரம்

கறுப்பனகவுண்டர் என்னும் என்னால் நலமாயி நிறுமாணிக்கப்பட்ட யிவாலயம் என்னுடைய புத்திரபவு

த்திறமாகத் தோணி வுத்தம புருஷராயிருப்பார் சந்திரப் பிரவேசம்

சூரிய பிரவேசம் வுள்ளவரையில்

லச்சிக்க வேண்டியது இதற்கு யாதொருத்தர் வில்லங்கம் செய்தார் வுண்டாகில் கெங்கைக் கரையில் காராம்

5.        பசுவை வதை செய்த பாவத்துலேயும் பிருமணனரைக் கொன்ன

தோஷத்திலேயும் போகக் கடவது மேன்மேலும் ஆலயம் செய்தார் காசியிலே ருமேசுரத்திலே ஆயிரலிங்கம்

பிறதிஷ்டித்தது சுத்து மதில் செய்த புண்ணியம் அடையக்கடவர்

ஸ்ரீ சடையப்பந் லச்சிப்பார் ஸ்ரீ சடையப்ப நல்லது துணையில்லை ஸ்ரீ சுபம் யிறு கொல்லப்பட்டன்  எழுத்து 2

கலி – 4929 – கி.பி. 1828

சாலி - 1750 -  கி.பி. 1828

 

சறுவதாரி

மார்கழி – 16 தீ

 ஸ்ரீ சடையப்பர் நில மானிய ஏடு

 

ஸ்ரீ சடையப்பர் நிலமானிய ஏடு

யிது வெண்டுவ கறுப்ப கவுண்டன் ஏடு

யெடுத்தவன் குடுக்கவும்

உ. சடையப்பற் துணை

சுப மஸ்து ஸ்வஸ்திஸ்ரீ நிகழும் கலியுக சகாத்தம் சகக்ஷக்ஷள உயக்ஷ  க்குச் சரியான சாலிவாகன சகாத்தம் எளருய சறுவதாரி சம்வத்சரம் மாறுகழி மீ 16 தேதி சுபயோக சுபதினத்தில் கொங்கு மண்டலம் மேல்கரை யரைய னாட்டுக்குச் சேந்த கொல்லங்கோயில் கிராமத்தில் காங்காகுல வெண்டுவ கோத்திரம் கறுப்பன கவுண்டனாகிய என்னால் பிரதிஷ்டை செய்யப்பட ஸ்ரீ சடையப்பசாமி கோயிலுக்கு நான் விட்ட நிலமானிய விவரமானது என்னுடைய நிலமாய் எனக்கு பாத்தியப்பட்ட பூமி யிதன் கிழக்கு எல்லை  புலவனார் காட்டுக்கும் பூப்பாரக் காட்டுக்கும் மேற்கு, யிதன் தெக்கு  எல்லை  கறுப்பன கவுண்டனுகுச் சொந்தமான காட்டுக்கு வடக்கு, யிதன் மேக்கு எல்லை கானில காட்டுக்கும் குட்டகாட்டுக்கும் ஏரி காட்டுக்கும் கிழக்கு, யிதன் வடக்கு எல்லை தாசி காட்டுக்குக் தெக்கு யிபெருநான்கெல்லைக்குட்பட்ட நஞ்சை புஞ்சை காடு களர்திட்டுத் திடல் மேனோக்கிய மரமும் கீனோக்கிய கிணறும் சர்வ மானியமாக விட்டேன். இதன் பயனால் வரும் நிதி நிகேஷ்பங் கொண்டு சடையப்பற் பூசை நடத்தவும் இதை என்று பின் வரும் என் வங்குசத்தாரான வெண்டுவன் குலத்தாரே காத்து ரக்ஷிக்க கடவாராகவும் ஆத்துமணல் ஆவிரம்பூவும் உள்ளவரை இத்தன்மம் ரக்ஷிக்க கடவாராகவும் ஆத்து மணலும் ஆவிரம்பூவும் உள்ளவரை இத்தன்மம் ரக்ஷிக்க உ.

கலி - 4929

சாலி – 1750

மார்கழி தேதி – 16

சடையபப்ர் நாலுகரை வெண்டுவருக்கும் தெய்வமாதல்   

அது முதல் அவ்வூரில் உள்ள தனது சகபங்காளிகள் மற்றும் வெளியூர் சென்ற பங்காளிகள் என நாலு கரை வெண்டுவ கோத்திர பங்காளிகளும் சடையப்பசாமியிடம் அருள்வாக்கு பெற்று வழிபட்டு வரலாயினர். சடையப்பசாமியானவர் உஞ்சவனத்து அய்யன், தன்னாசி, சாம்பராணி வாசகன் என அதுமுதல் அழைக்கப்பட்டு வந்தார்.

சாமி சடையய்யா தன்னாசி

 கோப்புலிதுறை கோப்புலிநத்தம்

 ஊஞ்சவனத்தையா

 ஆனைமலை பண்டிதா

 சாம்பிராணி வாசகா”

மக்களுக்கு உள்ள வேண்டுதல்களை உள்ளபடி தீர்த்துவைத்து வந்தார் சடையப்பசாமி. இரவு ஏழு மணிக்கு மேல் தன்னாசியானவர் வனத்தில் உளாவி இரவில் கிராமத்தில் வேட்டைக்கு சென்று தீய சக்திகளை அகற்றி கிராமத்தை காத்து வந்தார்.

கருப்பண்ண கவுண்டர் – கோமனாண்டியை பூசைக்கு நியமித்தல்

காலங்கள் போயின. சடையப்பசாமியை கும்பிட பலர் வெளியூர் பங்காளிகள் நேரங்கெட்ட நேரத்தில் வரலாயினர். ஆகையால், கருப்பண்ண கவுண்டருக்கு பண்ணையத்தை பார்க்கும் வேலை கேட்டு பூஜை செய்யும் நேரம் அதிகமானது. இதனால், கருப்பண்ண கவுண்டர் ஒரு முடிவுக்கு வந்தார். அருகில் வெங்கம்பூரில் உள்ள கோமனாண்டி வகையராவில் ஒருவரை அழைத்து வந்து பூஜை முறைகளை சொல்லிகொடுத்து அவருக்கு 3 ஏக்கர் பூமியை ஜீவனத்துக்கு கொடுத்து பூஜைக்கு அமர்த்தினார்.

கவை பூஜை, கருப்பண்ண கவுண்டர் பூஜைகள்

கருப்பண்ண கவுண்டர் மாசி சிவராத்திரி பூஜை மற்றும் அன்னதானம், பங்குனி யுகாதி, பங்குனி உத்திரபூஜை, ஆடி பதினெட்டு பூஜை ஆகியவற்றை மட்டும் கருப்பண்ண கவுண்டர் செய்துவந்தார். அதோடு, சடையப்பசாமிக்கு ஒரு கவை ஒன்றை செய்து அதனை தன வீட்டில் வைத்து வழிபாட்டு வந்தார். தான் பூசைக்கு வரும் நாளில் அக்கவையை கோயிலுக்கு கொண்டுவந்து பூசைசெய்து தீர்த்தத்துக்கு சென்று காவேரியில் கொண்டு வந்து சடையப்பர் சந்நிதியில் பூஜை செய்து மீண்டும் வீட்டுக்கு எடுத்துசென்று தனி அறையில் வைத்து பரம்பரை பரம்பரையாக பூஜைசெய்துவந்தார். 

கோமனாண்டிக்கு மேலும் நிலம் அளித்தல்

பூசை செய்ய நியமிக்கப்பட்ட கோமானாண்டிக்கு மூன்று மகன்கள் பிறந்து குடும்பம் பெரிதாகிவிட்டது என்று கேட்கவே, கருப்பண்ண கவுண்டர் மேலும் ஆறு ஏக்கர் நிலம் ஜீவனத்துக்கு கொடுத்தார். அது காசி காடு மற்றும் பண்ணை காடு என்று அழைக்கப்படுகிறது.   

வசவன் சாமி உருவாதல்

முன்னர் சாமியின் மேல் பால் சொரிந்து சுவாமியை வெளிக்கொண்டு வந்த பசு, பின்னர் இறந்து கோயிலில் புதைக்கப்பட்டது. இந்த கோயிலின் வடகிழக்கு மூலையில் "வசவன் சாமி" என்ற பெயரில் ஒரு தெய்வமாக வணங்கப்பட்டது. அதற்கு பின்பும் இரு மாடுகள் அவ்வாறு சாமிக்கு பால் சொரிந்து அவைகளும் இறந்த பின் சடையப்பசாமியின் பின்புறம் புதைக்கப்பட்டு அதுமுதல் தெய்வமாக வணங்கப்பட்டது. பங்குனி உத்திரத்தில் வசவன் சாமிக்கு பொங்கல் வைத்து பூஜை செய்து பண்டம்பாடிகளுக்கு நோய்நொடி இன்றி வராமல் பாதுகாக்க வேண்டிக்கொள்வர்.

சடையப்பர் கோர்ட்டில் சாட்சி

 வெள்ளைக்காரன் காலத்தில் சடையப்பசாமியானவர் ஒரு அபளை பெண்ணுக்கு கோர்ட்டில் சாட்சி சொன்ன வரலாறும் பதிவாகியுள்ளது. சுமார் 1862 ஆம் ஆண்டு வாக்கில் கொல்லன்கோயில் கிராமத்தில் பாளையக்காரர்களுக்கு நிறைய இடங்களில் பூமி இருந்துள்ளது. கந்தசாமிபாளையம் சாணங்குளம் பூமி வடபுறமாகவும், கிழபுரமாகவும் பாளையக்காரர்களுக்கு பூமி இருந்துள்ளது. (இன்றைய அரண்மனை தோட்டம்) சாணாந்தோட்டம் பூமியை அபகரிக்க வேண்டி பாளையக்காரர்கள் திட்டம் தீட்டினர். அதன் விளைவு பிரச்சனையை சென்னிமலை நீதிமன்றத்துக்கு போனது. இந்த வழக்கை எதிர்கொண்டு சாணார்குளம் வகையறாவைச் சார்ந்த பழனியம்மாள் என்ற ஆத்தா கோர்ட்டுக்கு குதிரைச் சவாரியிலேயே சென்று வந்துள்ளதாக அவர்கள் வாரிசுகள் தெரிவிக்கிறார்கள். பழநியம்மாளைப் பெண் எடுத்த ஊர் எரப்பம்பாளையம் ஆகும்.

வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி அவர்கள் பழநியம்மாளைப் பார்த்து உங்களுக்கு சாட்சி யார்? என்று கேட்க, சாட்சிகள் பாலமலைக்கு போய்விட்டதால் பழனியம்மாள் தயங்காமல் சடையப்பசாமி என்று கூறிவிடுகிறார். இவரது பதிலைக் கேட்ட நீதிபதிக்கு ஒரு புறம் சிரிப்பு வந்தாலும் மனதில் ஒரு ஐயமும் கூடவே இருந்துள்ளது. நீதிபதியும் ஒரு கணம் சிந்தித்துவிட்டு, ஆத்தாள், அவர்கள் உறுதியோடு சொன்ன காரணத்தால் அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர்கள் அமினா மூலமாக சடையப்பசாமிக்கு சம்மன் அனுப்ப உத்தரவு இடுகிறார். சமம்னை பெற்றுக்கொண்ட அமீனா சடையப்பசாமி கோயில் வனத்திற்கு வந்தடைகிறார். அமீனா கோயில் வாசலில் சம்மனை கல்வைத்து பத்திரப்படுத்தி விட்டு திரும்பி விடுகிறார். கோர்ட்டில் குறிப்பிட்ட நாளில் வாய்தா தேதியும் வருகிறது. பாளையக்காரர்களும், பழனியம்மாளும் கோர்ட்டில் ஆஜராகின்றனர். நீதிபதி அவர்கள் பழனியம்மாளின் சாட்சியான சடையப்பசாமியை மூன்று முறை கூவி அழைக்கின்றனர். சாமியும் சாட்சிக்கு வரவில்லை. நீதிபதி அவர்கள் பழநியம்மாளைக் கூப்பிட்டு சாட்சிவரவில்லையே என்று கேட்க, பழனியம்மாளும் இன்னும் ஒரு வாய்தா மட்டும் கொடுங்கள் என்று மறு தேதியில் வாய்தா வாங்குகிறார். அடுத்த வாய்தா தேதி அன்று அதிகாலையில் பழனியம்மாள் நேராகக் கோயிலுக்கு சென்று சடையப்பசாமியிடம் தன கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டுமாய் பிரார்த்தனை செய்துவிட்டு கோர்ட்டுக்குப் போய்விடுகிறார். கோர்ட் நேரம் வந்தது. நீதிபதி சாமியை அழைக்க சபேதாரிடம் கூற அவரும் இருமுறை அழைத்தவுடன், நீதிபதியின் மேசை குழுங்கி மேசையிலிருந்த காகிதங்கள் அனைத்தும் பறந்திட நீதிபதியும் பயந்து பழனியம்மாளுக்கு சாதகமாக தீர்ப்பினை வழங்கிவிடுகிறார். கேஸ் விசாரணைக்கு பாளையக்காரர்கள் வந்து குதிரை வண்டி பாதியிலேயே குதிரை தானாகவே ஊரை நோக்கி திரும்பிவிட்டது,

வெண்டுவ கோத்திர பங்காளி 1874 இல்  கெருடகம்பம் உபயம்  

கோர்ட் வெற்றியின் அடையாளமாக சடையப்பசாமி கோயிலின் முன்பாக சாணான்தோட்டம் வகையறாக்கள் கெருடகம்பம் நிறுவி உள்ளனர். அவர்களது வாரிசுகளும் மற்றும் அனைத்து மக்களும் நந்தாதீபம் ஏற்றி வழிபாட்டு வருகிறார்கள்.    கி.பி. 1874 இல் அருகில் உள்ள கந்தசாமிபாளையத்தை சேர்ந்த வெண்டுவ கோத்திர பங்காளி நாச்சிமுத்து கவுண்டன் என்பவர் கோயிலுக்கு கெருடகம்பம் ஏற்படுத்தி வைத்தார். அதற்கான கல்வெட்டும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு – கருடகம்பத்தில்

 

சடையப்பருக்கு எசவடங்கள்

சுவாமியை வேண்டி பலர் தனது வேண்டுதல்கள் நிறைவேறவே, அவர்கள் கோயிலில் உள்ள சடையப்பசாமியின் காவல் தெய்வங்களுக்கு கிடாய் வெட்டுவதும், குதிரை. தூரி,  சடைமுனி  மற்றும் மாடு வாகனங்களை எசவடமாக சுவாமிக்கு செய்துவைக்களாயினர்.

 

கருப்பண்ண கவுண்டர் பூசாரி வகையறா தை மாசியில் படிவிளையாட செல்லுதல்

கோயிலை கட்டிவைத்த கருப்பண்ண கவுண்டர் வம்சத்தார் வெளியூர்களில் இருந்த வெண்டுவ மற்றும் இக்கோயில் காணியாள பண்ணை கோத்திரத்தார் ஊர்களுக்கு, வருடாவருடம் தைமாதம் முதல் சடையப்பசமியை கவையுடன் எடுத்து சென்று படிவிளையாடி பூஜை செய்து அதன் மூலம் கிடைக்கும் தானியங்களை கொண்டு வந்து மாசி சிவராத்திரிக்கு கொண்டுவந்து அன்னதானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு சஞ்சாரம் செல்லும் காலங்களில் அவ்வூரில் சடையப்பசாமி அங்கேயே உருவாக்கி குடிகொண்ட வரலாறும் உள்ளது.

கருப்பண்ண கவுண்டர் வகையறா

 

கோபுரம் இல்லாத ஆகாச சக்தியாக சடையப்பர் நிற்றல்

இவ்வாறு பலகாலம் உருண்டோடினாலும் சாமிக்கு கோயில்கோபுரம் கட்ட முற்பட்டபோது சடையப்பசாமியானவர் தான் வெட்டாரவெளியில் இருக்க விரும்பவதாக கூறி கோபுரம் கட்டக்கூடாது என சொல்லிவிட்டார். ஆகையால் இன்று வரை சுவாமி மழையில் நனைத்து மரங்களுக்கு நடுவில் நிலைகொண்டு உள்ளார்.

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

சடையப்பசாமி கோயிலும், காடும் அழிக்கப்பட்ட சரித்திரம்

வெண்டுவ கோத்திர ஸ்ரீ சடையப்பசாமி கோயில் இன்றைய ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகாவின் கொல்லன்கோயில் கிராமத்தில் அமைந்துள்ளது. தாண்டாம்பாளையம் கர...